கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி-5

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.


*பகுதி - 5 :*

*ஓய்வூதிய உரிமைப் பறிப்பில் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF):*


உலக வங்கியின் பரிந்துரைப்படி, உலக நாடுகளில் அரசு ஊழியர்களின் ஒய்வூதியத்தினை தனியார் மயமாக்கும் முயற்சியில் 1980-ல் முதலில் இறங்கிய நாடு லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி ஆகும்.

உலக வங்கியின் கட்டளைக்கு இணங்க பங்குச்சந்தையின் அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தின்  பரிசோதனைக் கூடமாக சிலி செயல்பட்டது. 1980-ல் சிலியினை சர்வாதிகார ஆட்சி செய்த ராணுவ ஜெனரல் ஜோஸ் இராணுவம் மற்றும் காவல்துறை தவிர்த்து(!?)  அனைத்துத் துறையினருக்கும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.

இத்திட்டப்படி ஊழியர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டது. இதனை நிர்வகிக்க 7 தனியார் நிதி மேலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காகச் சந்தாதார்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அரசு ஊழியர்களிடம் அபகரிக்கப்பட்ட தொகை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து, ஓய்வூதியம் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் உலகப்பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

1991-ல் நிகழ்ந்த இரஷ்யப் பிரிவினைக்குப் பின்னர், உலக நாடுகளில் அமெரிக்காவை மையப்படுத்திய ஒருதுருவப் பொருளாதாரம் வலுவடைந்தது. தனது வல்லாதிக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா முழுமூச்சாக நிறுவியது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்களின் பொருட்டு அரசின் பொறுப்பில் இருந்த ஓய்வூதியத்தை விடுவித்துத் தனியாருக்குத் தாரைவார்க்க அமெரிக்கா துணிந்தது. இதன் விளைவாக, அமெரிக்காவின் கருவிகளாகச் செயல்படும் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் நிர்பந்தம் காரணமாக உலகில் பல நாடுகளிலும் புதிய ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள நாடுகளில், முதியோர் நலன் காப்பது என்ற பெயரில் 1994-ல் உலக வங்கியால் வெளியிடப்பட்ட "*வயது மூப்புக் கால நெருக்கடியைத் தவிர்ப்பது*" என்ற ஆய்வறிக்கை வயது முதிர்ந்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதில், இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் காரணமாக *ஓய்விற்கு பின்னும் நீடித்து உயிர் வாழ்வதால் அரசாங்கங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனைகளையே பிரதானப்படுத்தியது.* எதிர்காலங்களில் ஓய்வூதியச் செலவுகள் அதிகமாவதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டத்தினை இவ்வாய்வறிக்கை உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும், உலக நாடுகளால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டங்களுக்கு மாற்றாக, உலக வங்கி மூன்று புதிய திட்டங்களை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் பின்பற்ற அறிவுறுத்தியது.

அத்திட்டப்படி முதலாவதாக அரசாங்கத்தால் வழங்கப்படும்,

1.அனைவருக்குமான கட்டாய ஓய்வூதியத் திட்டம். அரசாங்க வரியில் கிடைத்த நிதியினைக் கொண்டு அரசாங்கத்தால் ஏழ்மையினைப் போக்க வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத்திட்டம்.

2.ஓய்வுக் காலத்திற்கான ஊதியச் சேமிப்புகளைத் தனியார் நிர்வாகத்திற்கு உட்படுத்தும் கட்டாய ஓய்வூதியத் திட்டம்.

3.சுயவிருப்ப ஓய்வூதியத் திட்டம்;

ஆகியனவற்றைப் பரிந்துரைத்தது.

*சர்வதேச அளவில் ஓய்வூதியம் வழங்கும் அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பான ஓய்வூதிய மேற்பார்வையாளர்களின் சர்வதேச அமைப்பு*(IOPS : International Organization of Pension Supervisor) 2004 ஜூலை முதல் செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பில் இந்தியா உள்ளிட்ட 72 நாடுகள் இணைந்துள்ளன. இதில் இந்தியாவில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) உள்ளிட்ட 83 அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் உறுப்பினராக இந்தியா சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய கட்டணத்தினை IOPS அமைப்பிற்கு PFRDA செலுத்திவருகிறது.

வளரும் நாடுகள் அனைத்திலும் தோல்வியடைந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் உலகவங்கி அக்கறை காட்டினாலும் *அமெரிக்கா கடந்தகால அனுபவங்களைக் கொண்டு இதுவரை இவ்வமைப்பில் சேரவில்லை* என்பது நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் அமெரிக்க ஆயுள் காப்பீட்டு குழுமம் (ACLI) இவ்வமைப்பின் பார்வையாளராக மட்டும் உள்ளது

அதிர்வுரும் பதிவுகள் தொடரும். . . .

அரசு ஊழியர் & ஆசிரியர்களின் CPS பிடித்தம் ஏ. . . .ப். .பமா?

*ரூ.18,016 கோடி இருக்கு. . .!*

*ஆனா இல்ல!!*

2003-ற்குப் பிறகு தமிழ் நாடு அரசு, அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் CPS பிடித்தமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து  ரூ.18,016,00,00,000/-யை ஓய்வூதியப் பொதுக்கணக்கில் வைத்திருப்பதாக சட்டமன்றத்தில் 2017-18
*கோரிக்கை எண்.50-ல்* தெரிவிக்கப்பட்டிருந்தது.

31.3.2017 நிலவரப்படி அரசின் பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகை,

❔எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம்

❔எந்தந்த கணக்குத் தலைப்புகளில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம்

❔பொதுக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை பிறவகையில் முதலீடு செய்யப்பட்ட விபரம் ஆகியவை குறித்து

*தகவலறியும் உரிமைச் சட்டத்தில்,*
ஊழியர்களின் ஊதியப் பிடித்தங்களைச் செய்துவரும் *கருவூலக் கணக்குத்துறை*யிடம் கேட்கப்பட்டது.

ஆனால், கருவூலக் கணக்குத்துறையோ பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை எவ்வளவு? எந்தத் தலைப்பில் வரவாக்கப்பட்டது? செலவாக்கப்பட்டது? உள்ளிட்ட எந்தக் கேள்விக்கும் தன்னிடம் பதில் இல்லை என அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தை *(GOVT. DATA CENTRE)  கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது.*

கருவூலம் தரும் ஊழியரின் ஊதிய ஓய்வூதியப் பிடித்தம் & நிலுவை விபரங்களை இணைய தளத்தில் வெளியிடும் அமைப்பான தகவல் தொகுப்பு விபர மையம் இக்கேள்விகளெல்லாம் *தனது துறை தொடர்புடையது அல்ல எனக் கூறி நிதித்துறைக்கு அனுப்பிவிட்டது.*

ஊழியருக்கான ஊதியம் வழங்கல் & தலைப்பு வாரியாகப் பிடித்தங்களை மேற்கொள்ளும் கருவூலக கணக்குத்துறையிடமே ஊழியர்களின் CPS பிடித்தங்கள் பற்றிய தகவல்கள் இல்லாதது ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

*திண்டுக்கல் எங்கெல்ஸ்*

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : பகுதி 4

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 4 :*

*பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள்*

அரசு ஊழியர்களின் பல்வேறு வகையான தியாகங்கள் மற்றும் கூட்டுப் போராட்டங்களின் காரணமாக இந்தத் திட்டத்தில்,

Øஓய்வூதியம் (Pension)

Øகுடும்ப ஓய்வூதியம் (Family Pension)

Øபணிக்கொடை (Gratuity)

Øஓய்வூதியத்தினை மொத்தமாகத் தொகுத்துப் பெறுதல் (Commutation)

Øவருங்கால வைப்பு நிதி

முதலான உரிமைகள் கிடைத்தன. இந்தப் பலன்களைப் பெற, *பணிக்காலம் / இறுதியாகப் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், திட்டமிட்ட உறுதியான கணக்கீடுகள் மூலம் ஓய்வூதியப் பலன்கள்* கிடைக்கப்பெற்றன.

மேலும் ஊதியக் குழுக்களின் மூலம், விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி உயரும் போது ஓய்வூதியமும் உயர்ந்ததோடு, பிற பலன்களை முன்னர் பெற்றதைவிடக் கூடுதலாகப் பெற முடிந்தது.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்காக ஒரு முறையான நிதியினை மத்திய, மாநில அரசுகள் நிறுவவில்லை. மேலும், Pay-as-you-go என்ற அடிப்படையில் அரசின் தொகுப்பு நிதி (Consolidated fund)-யில் இருந்து போகிற போக்கில் பணப்பட்டுவாடாவாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.  இத்திட்டமானது  *31.03.2003-க்கு முன்பு வரை பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும்* நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.


*குடும்ப ஓய்வூதியம்:*

குடும்ப ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர் பணியின் போது அல்லது ஓய்விற்குப் பின், மரணம் அடைந்தால் குடும்ப நலன் கருதி தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும். தமிழக அரசால் 1964 முதல் குடும்ப ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், பல்வேறு குறைபாடுகளால் பெரும்பான்மையான தகுதியானவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

அரசாணை எண்: 748, நாள்: 26.05.1979-ன்படி 01.04.1979 முதல் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.


*பணிக்கொடை:*

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணிபுரியும் போதே மரணம் அடைந்தாலோ அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம்  2 மாத ஊதியமும் அதிகபட்சமாக 16.5 மாத ஊதியமும் (அதிகபட்சமாக 7வது ஊதியக்குழுவில் ரூ.20 இலட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படுகிறது.


*பொது வருங்கால வைப்புநிதித் திட்டம்:*

வருங்கால வைப்புநிதித் திட்டப்படி அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 12% தொகை பிடித்தம் செய்யப்பட்டு அத்தொகைக்கு அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வட்டியுடன் சேர்த்து பொதுக்கணக்கின் கீழ் வைக்கப்படுகிறது.

இத்தொகையினை 6 மாதத்திற்கு ஒரு முறை திரும்பச் செலுத்தக் கூடிய கடனாகக் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவு, திருமணம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவின் பொருட்டு ஊழியர்கள் பெறலாம்.

15 ஆண்டு பணிமுடித்த ஊழியர்கள் ஆண்டிற்கு ஒரு முறை இருப்பில் உள்ள தொகையில் 90% தொகையை திரும்பச் செலுத்தாத வகையிலும் பெறமுடியும்.

ஆனால், *புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, வைப்புநிதி உள்ளிட்ட மேற்கண்ட எவ்விதப் பயன்களும் இல்லை.*

பதிவுகள் தொடரும். . . .

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? - பகுதி 3

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 3 :*


*தமிழ் நாட்டின் ஓய்வூதிய வரலாறு*


தமிழகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலங்களில் அரசு ஊழியருக்கு மட்டும் மிக சொற்பமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

1960-ஆம் ஆண்டு மாவட்டக் கழகப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக்கப்பட்டன. அதுநாள் வரையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்பது வழங்கப்படவில்லை.

1956-ஆம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்காக, அரசு மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய வைப்புநிதித் திட்டமாக ஓய்வூதியத் திட்டத்தினை முதன் முதலில் கொண்டு வந்தது. 01.04.1956 முதல் 13.06.1966 வரை நடைமுறையில் இருந்த இத்திட்டத்தின்கீழ், ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10ம் வழங்கப்பட்டது.

05.12.1964 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஒன்றுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் அன்றைய முதல்வர் திரு.பக்தவச்சலம் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், கூட்டணியின் தலைவர் இராமையாதேவர், *"தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் அனாதைகளை விட குறைவான ஓய்வூதியம் பெறுகின்றனர். எனவே, அனாதைகளுக்கு வழங்கப்படுகின்ற ரூ.20-ஐயாவது ஆசிரியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும்"* என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் மாநாட்டில் கூறியதாவது *"கூட்டணியின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்களுக்கு ரூ.20 ஓய்வூதியம் வழங்கப்படும்"* என்றார். பிறகு 14.06.1966 முதல் 17.11.1968 வரை ரூ.20 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

18.11.1968 முதல் 30.09.1978 வரை ரூ.50-ம், அதன் பின்னர் ஊதியத்தில் 30/80, 33/80 என்ற விகிதங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

        அரசாணை எண்: 57, நாள்: 02.02.1980-ன் படி 01.10.1980 முதல் படி-முறை (SLAB SYSTEM) அடிப்படையில் சராசரி மாத ஊதியம்,

ரூ.1000 எனில் 50%

ரூ.1000 - 1500 எனில் 45%

ரூ.1500-க்கு மேல் எனில் 40%

என ஊதியத்தின் படி ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

அதன்பின் அரசாணை எண்: 1030, நாள்: 14.12.87-ன் படி கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சராசரி 50% 14.12.1987 முதல் வழங்கப்பட்டது.

அரசாணை எண்: 639, நாள்: 03.07.1972-ன் படி 01.04.1972 முதல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கப்பட்டது

பதிவுகள் தொடரும்.  . . . .

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? - பகுதி 2

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*பகுதி - 2 : ஓய்வூதியத் தோற்றமும் உலக நாடுகள் & இந்தியாவில் ஓய்வூதிய அறிமுகமும்*


*ஓய்வூதியத்தின் தோற்றம் :*

முதன் முதலில், ஜார் மன்னராட்சியின் பிடியிலிருந்து இரஷ்யப்புரட்சியினால் மீண்ட ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில், லெனின் தலைமையிலான மக்கள் நல அரசு, உழைப்பாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளிலும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இப்புரட்சிப் பரவுவதைத் தடுத்திடும் நோக்கில் அந்நாடுகள் சிலவற்றில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓய்வூதியத் திட்டம் ஏற்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.*உலக நாடுகளில் ஓய்வூதியம்:*


*சீனா (National Social Security Fund) :*

தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியினை ஏற்படுத்தி உத்திரவாத அடிப்படையில் குறைந்தபட்சம் மாதம் 55 யுவான் (சீன ரூபாய்) வழங்கும் ஏற்பாடு உள்ளது.  இன்றைய நிலவரப்படி சீனாவில் 12.30 கோடி ஓய்வூதியர்கள் உள்ளனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் உள்ள நாடாக சீனா இருந்த போதிலும் உழைப்போரின் நலன் கருதி குறைந்தபட்ச ஓய்வூதியத்தினை உறுதிபடுத்தியுள்ளது.


*தென்னாப்பிரிகா (Social Security Agency) :*

சமூகப் பாதுகாப்பு முகமை மூலமாக குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,200 வழங்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 ஓய்வூதிய உயர்வு வழங்கப்படுவதுடன் பிற ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு வழங்கப்படுகிறது.


*பிரான்ஸ்:*

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் ஓய்வூதியம் எனில் ஆண்டிற்கு 8,507 யூரோவும், குடும்பத்தில் உள்ள இருவரும் ஓய்வூதியம் பெறுவோராயின் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக ஆண்டிற்கு 13,890 யூரோவும் வழங்கப்படுகிறது. இதில், ஊழியரின் பங்களிப்பு 6.65% அரசின் பங்களிப்பு 8.3%.


*ஸ்பெயின்:*

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 588 யூரோ அல்லது ஆண்டிற்கு 8,229 யூரோ என நிர்ணயம் செய்துள்ளது.


*பாகிஸ்தான்:*

குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.3,600-ஐ 01.01.2012 முதல் வழங்கி வருகிறது.*ஆங்கிலேய ஆட்சியின்கீழான இந்தியாவில் ஓய்வூதியம்:*

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழான இந்தியாவில், தங்கள் நாட்டிலிருந்து பல பணியாளர்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பணிகளில் ஈடுபடுத்தினர். ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனப் பணியாளர்கள் பணிக்காலத்திற்குப் பின்பும் ஆங்கிலேயர்களுக்குத் தொடர்ந்து விசுவாசமாக நடந்து கொள்வதற்காகவும், வயதான காலத்தில் ஓரளவுக்காவது வாழ்வதற்கேற்பவும் ஓய்வூதிய திட்டத்திட்டமானது வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஆங்கிலேயப் பணியாளர்களுக்காக முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவன ஆட்சி, 1857-ற்குப் பின்னான இங்கிலாந்து அரசியின் நேரடி ஆட்சி நிர்வாகத்தில், இந்தியாவைத் தொடர்ந்து ஆள்வதற்கான பல்வேறு தேவையினை ஒட்டி, கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் பலரையும் அரசுப்பணிகளில் நியமித்தனர். இவர்களில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட இந்தியர்களுக்கும், தம் நாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப் போன்று ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதால், 1872-ஆம் ஆண்டு இந்திய ஓய்வூதியச் சட்டம் (Indian Pension Act 1872) அன்றைய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையாளர்களின் பரிந்துரையின்படி ஆங்கிலேய ஆட்சியின், அரசு உயரதிகாரிகளின் பணி ஓய்விற்குப் பின், நிலமாகவோ அல்லது பணமாகவோ ஓய்வூதியம் வழங்கும் முறை இந்தியாவில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.*இந்தியக் குடியரசில் (பழைய) ஓய்வூதியம்:*

நாடு விடுதலை பெற்றபின், இந்தியக் குடியரசில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என்பது, அரசின் பங்களிப்புடன் கூடிய வருங்கால வைப்புநிதித் திட்டமாக (Contributed Provident Fund) செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 6% பிடித்தம் செய்யப்படும், அதற்கு ஈடான தொகையினை அரசும் வழங்கும். ஒரு கட்டத்தில் தன்னால் பங்களிப்புத் தொகையை வழங்க முடியாது என்ற நிலையில், அரசு தனது பங்களிப்பை நிறுத்தியது.

அதற்குப் பதிலாகப் பழைய ஓய்வூதியத் திட்டமான வரையறுக்கப்பட்ட பலன்களை உள்ளடக்கிய ஓய்வூதியத் திட்டத்தினை (Defined Benefit Pension System) அரசு செயல்படுத்தத் தொடங்கியது.

பதிவுகள் தொடரும். . . .

கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : 1

*கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?*

- திண்டுக்கல் எங்கெல்ஸ்.


பகுதி : 1


*ஏன் வாசிக்க வேண்டும் இத்தொடர் கட்டுரையை?*

புதிய ஓய்வூதியத் திட்டம் (New Pension Scheme), தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme), தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் (Contributry Pension Scheme) என்று பல பெயர்களில் அழைக்கப்படும்,

Øபுதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் உண்மையான கோர முகம் என்ன?

Øஉண்மையிலேலே இது ஓய்வூதியத் திட்டம் தானா?

Øஓய்வு பெற்றபின் ஊதியம் பெறுவது நமக்கான உரிமையா?

Øஇத்திட்டத்தை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் நல அமைப்புகள், இடது சாரிகள், எனப் பலரும் தொடர்ந்து எதிர்ப்பது ஏன்?

Øஎதிரும் புதிருமான மாநில, தேசியக் கட்சிகள்கூட இத்திட்டத்தை மட்டும் ஒருமனப்பட்டு ஆதரிப்பது ஏன்?

Øஇதன் பின்னணியில் உள்ள தீய சக்தி எது?

Øஇத்திட்டத்தால் இந்திய அரசு இயந்திரம் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன?

Øஇந்த ஓய்வூதியப் பறிப்பை மீட்பது எப்படி?

இக்கேள்விகளுக்கான உண்மையான விடைகளை அறிந்தே ஆகவேண்டிய கட்டாயச் சூழலில், இன்றைய ஊழியர்கள் மட்டுமின்றி நாளைய ஊழியராகவுள்ள தங்கள் பிள்ளைகளுக்காகவும் நாம் யாவருமே அறிந்து தெளிந்து செயல்படவே இக்கட்டுரை.


*ஓய்விற்குப் பின்னான ஊதியம் உரிமையா? கருணையா?*

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன் படி அனைவரையும் சமமாகப்பாவிக்க வேண்டும் என்றும், 01.04.1979 தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டின் படி வழங்கப்படுவதைப் போன்றே 31.03.1979-ற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரே விதமாக ஓய்வூதியக் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி தொடுக்கப்பட்ட "D.S நகரா எதிர் இந்திய அரசு" வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு,

★ ஓய்வூதியம் என்பது ஒரு உரிமை.

★ அது கருணைத்தொகை அல்ல.

★ அரசு ஊழியரின் நீண்ட கால மற்றும் திறமையான பணிக்கான கொடுபடா ஊதியம்.

★ ஓய்வூதியம் என்பது சமூகப் பொருளாதார நீதியின் பொருட்டு வாழ்நாளின் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட வேண்டிய பொருளாதாரப் பாதுகாப்பு.

★ அரசியல் சட்டப்பிரிவு 41-ன்படி முதுமை, நோய், இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் போது அரசு வழங்க வேண்டிய உதவிகளைச் செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி.

என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.


*N.P.S / C.P.S: பங்களிப்பு ஓய்வூதியமா? பங்கு-அழிப்பு ஓய்வூதியமா?*

இருக்கின்ற உரிமைகளை மறுக்கின்ற / பறிக்கின்ற போது அதை வார்த்தை ஜாலங்களால் மறைப்பது "பொருளாதார மேதைகளுக்கே உரிய தந்திரம்".

எனவேதான் எவ்வித ஓய்வூதியப் பலனும் இல்லாத இத்திட்டத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் (NEW PENSION SYSTEM) என்று பெயரிட்டுள்ளனர். உண்மையில் இது ஓய்வூதியத்தினை முற்றாய் ஒழிக்கும் ஒன்றுமில்லா ஓய்வூதியத் திட்டம் *(NO PENSION SYSTEM).*

ஓய்வூதியத்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் அலங்காரமாகச் சொல்லப்படுகின்ற முயற்சிகள் உண்மையில் ஓய்வூதியம் என்பதைக் கனவாய் - கானல் நீராய் மாற்றிவிடும். இதனால் ஏற்படும் பாதகங்கள் அரசு ஊழியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் பழாக்கிவிடும்.

ஆம்!

தனியார் துறைக்கும் அரசுத் துறைக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடே ஓய்வூதியம் தான். பலர் அரசுப் பணியை விரும்பக் காரணமும் இதுவே. ஓய்வூதியமே இல்லை எனில், அரசிற்குத் திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பது அரிதாகிவிடும். இதனால் இந்திய அரசு இயந்திரத்தின் இயக்கம் பழுதடைய நேரிடும்.

மறுபுறம், இந்திய மனித வளம் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த கூலியில் கொத்தடிமைகளாகக் கிடைக்கக் கூடும்.

எனவே, இப்புதிய ஓய்வூதிய திட்டத்தின் முழு வடிவத்தினையும், பரிமானத்தினையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தினை முறியடிக்க ஒன்றுபட்டுப் போராடுவது அரசு ஊழியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் முன்னிற்கும் மிகப்பெரிய கடமையாகும்.

நம் முன் உள்ள மிகமுக்கியக் கடமையை முழுமையாக உணர்ந்து கொள்ள ஓய்வூதிய வரலாற்றையும், ஓய்வூதியப் பறிப்பின் பின்னணியையும், அதன் சூழ்ச்சிமிகு செயல்பாடுகளையும் அறிந்து தெளிவுற இத்தொடர் கட்டுரையை முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.

தாங்கள் வாசிப்பதோடு நில்லாது இதனை நமது சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் பகிர்ந்து ஓய்வூதிய உரிமை பற்றிய விழிப்புணர்வையும், அவ்வுரிமையை மீட்பதற்கான போர்க்குணத்தையும் வளர்க்க வேண்டுகிறேன்.

பதிவுகள் தொடரும். . . .

CPS-ஐ ரத்து செய்ய mail நிரப்பும் போராட்டம்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
*குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை. எனவே, வல்லுநர் குழுவின் அறிக்கையை அரசிடம் அளிக்கும் வரை தினமும் mail அனுப்பி நமது உரிமையை மீட்டெடுப்போம்*
ஆகவே, CPS திட்டத்தில் உள்ள (& ஓய்வு பெற்ற) அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தினசரி mail அனுப்பி, CPS-ல் உள்ள நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வருவோம்!
*மின்னஞ்சல் முகவரிகள்:*
*CPS ஒழிய ஒன்றுபடுவோம்*
பின்வரும் கோரிக்கை அடங்கிய பதிவினை மேலே உள்ள 4 e-mail முகவரிகளுக்கும் mail அனுப்புவோம்!
- - - + - - - + - - - + - - - + - - + - - -
Subject :
PLEASE SUBMIT THE EXPERT COMMITTEE REPORT TO GOVT.
To
1. The Finance Secretary,
     Secretariat,
     St.George Fort,
     Chennai - 9
     finsec@tn.gov.in
2. The Chairman of Expert Committee,
    Plot No. E164, Door No.9,
    Chettinad House,
    Tiger Varadhachari Road,
    Besant Nagar first Cross,
    Chennai - 90
3. The Principle Secretory,
     Planning, Development & Special Execution Deportment,
     Secretariat,
     St.George Fort,
     Chennai - 9
     plansec@tn.gov.in
4. Dr.Brijesh C Purohit
    Professor,
    Madras School of Economics,
    Chennai - 25
    brijesh@mse.ac.in

Respected Sir / Madam,
According to the assembly announcement of former Honourable Chief Minister of Tamilnadu Miss.J.Jeyalalitha for the implementation of Old Pension Scheme on cancellation of Contributory  Pension Scheme an Expert Committee was constituted vide G.O.Ms.No:65, Finance (PGC) Department dated 26.2.2016.
After that thrice it was extended enabling the expert committee to finalize the report and yet the committee has not submit the report even after 16 months of time. So the government has not taken any action thereafter in deciding the issue.
It's most respectfully prayed that may be pleased to submit the report to the government as soon as possible, to take further action on the demand of implementation of Old Pension Scheme on cancellation of Contributory  Pension Scheme.
Thanking You!
Yours faithfully,
.................